அரசமைப்பின் “13′ ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு இந்திய அர ஒரு போதும் இடம்கொடுக்காது. இதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. டில்லிக்கு வந்த அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமும் இதனை ஆணித்தரமாக கூறியிருக்கிறோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாப்போம்.
இவ்வாறு நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதிபடத் தெரிவித்தார் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் இந்தியப் பயணத்துக்குப் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட, 13 ஆவது திருத்தம் தொடர்பான அறிக்கை இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் அதிலிருந்து இந்தியா சற்றேனும் பின்வாங்காது என்றும் சிவ்சங்கர் மேனன் கூட்டமைப்பிடம் கூறியுள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாலை 6 மணிக்கு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியத் தரப்பில் சிவ்சங்கர் மேனனுடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சின்ஹா, இந்தியத் தூதரக அரசியல் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சின் போது கூட்டமைப்பினர் சில விடயங்களை மேனனிடம் சுட்டிக்காட்டினர்.
இந்திய இலங்கை ஒப்பந்தமானது இலங்கை பல்லின பல்மொழி பேசும் நாடு என்பதை ஏற்றுக் கொண்டதுடன் வடக்கு கிழக்கு தமிழர்களின் தனித்துவம் மிக்க தாயகம் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் இன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் முற்று முழுதாக மீறப்படுகின்றது.
தமிழர் தாயகப் பிரதேசமாக ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்குகிழக்கில் தமிழர்களின் தனித்துவத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் இலங்கை அரசால் திட்டமிடப்பட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் கூட்டமைப்பினர் மேனனிடம் கூறினர்.
தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இராணுவக் குடியிருப்புக்கள், இராணுவ முகாம்கள் மற்றும் வலிந்த சிங்களக் குடியேற்றங்கள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையாவும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறும் செயல்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது சர்வதேச ஒப்பந்தம். அதில் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளுக்குமே அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் அதனை தட்டிக் கேட்க வேண்டிய தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கின்றது.
இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தின் பங்காளி என்றும் இந்தப் பேச்சின் போது கூட்டமைப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் அதிகாரங்களைப் பகிர்வதை நோக்கமாகக் கொண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் மக்களுக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு போதும் தீர்வாகாது.
இருப்பினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்த விதமான மாற்றங்களையும் செய்யக் கூடாது என்பதுடன், அதைப் பலவீனப்படுத்த இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகளையும் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூட்டமைப்பினர் கோரிக்கை முன்வைத்தனர்.
வடக்கு மகாண சபைத் தேர்தல் நீதியாக நடைபெற வேண்டுமாக இருந்தால், வடமாகாண சபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்க வேண்டும். அவர்கள் சிவில் உடையில் வெளியில் உலாவக் கூடாது.
மேலும் வடக்கில் ஒட்டுக்குழுக்களோ அல்லது எந்தத் தரப்பினரோ மக்களின் சுதந்திரமான வாக்களிப்புக்கு இடையூறாக இருக்கக்கூடாது. வடமாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருந்ததிலிருந்து முடிவடையும் வரை சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இங்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் மேனனுடனான பேச்சின் போது வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த சிவ்சங்கர் மேனன்,
13 ஆவது திருத்தத்தில் எந்தவொரு சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்த இந்தியா விரும்பவில்லை. 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். 13 ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்த இந்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உரிய முறையில் நடை முறைப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூட்டமைப்பிடம் உதியளித்தார் எனத் தெரியவருகிறது.
அத்துடன் வடக்கு மகாண சபை தொடர்பான விடயங்களை நாளை (இன்று) ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கலந்துரையாடுவதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிவசங்கர் மேனன் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.