Ad Widget

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி முல்லையில் மூன்று மீனவர்கள் உண்ணாவிரதம்

mullai_fishermen_protestமுல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று காலை முதல் முல்லை. மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் 600 க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரியும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக் கோரியும் இம்மீனவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளதுடன், 500இற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சி.அருள்ஜெனிபேர்ட் தெரிவித்ததாவது,

தொடர்ந்தும் எமது பகுதியில் உள்ள மீன்களை அத்துமீறி தென்பகுதி மீனவர்கள் பிடித்துச் செல்கின்றனர். இது குறித்து பலமுறை உரியவர்களிடம் முறையிட்டும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. இதனாலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலகத்தின் ஊடாக கடற்றொழில் அமைச்சருக்கும், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதிக்கும் எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்படவுள்ளது என்றார்.

“படையினரின் துணையோடு தானே நாயாற்றில் தென்பகுதி மீனவர்கள் குடியேற்றப்பட்டு இத்தகைய அத்துமீறிய மற்றும் சட்டவிரோத மீன்பிடிகளில் ஈடுபடுகிறார்கள். அதனை நிறுத்துமாறு கோரியே முல்லைத்தீவு இராணுவத் தளபதிக்கும் மனுவை அனுப்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இந்தக் குற்றச் சாட்டுக்களை படைத்தரப்பு தொடர்ச்சியாக மறுதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

mullai_fishermen_protest_letter

Related Posts