வல்வெட்டிதுறை பகுதியில் உயிரிழந்த தமது நண்பருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் துக்கத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் ஆட்டோ சாரதிகளால் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகள் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் அகற்றப்பட்டுள்ளன.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக சக ஓட்டோ சாரதிகள் தமது ஆட்டோ மற்றும் ஆட்டோ தரிப்பிட பகுதியில் கறுப்பு கொடிகளை பறக்க விட்டிருந்தார்கள்.
அந்த கறுப்பு கொடிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி நினைவு தினத்தை (இன்று கரும்புலிகள் நினைவு நாள்) முன்னிட்டே கட்டப்பட்டுள்ளதாக கூறி இராணுவத்தினர் மற்றும் பொலிசார் கறுப்பு கொடிகளை நேற்று அகற்றியதுடன் ஆட்டோ சாரதிகளையும் கடும் விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளனர்.
அதேவேளை சிவில் உடையில் குறித்த ஆட்டோ தரிப்பிடத்திற்கு வந்த சிலர் அங்குள்ள ஆட்டோ சாரதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.