யாழ் இந்துக் கல்லூரியில் “மகிந்தோதய” தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் நேற்றய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மகிந்த சிந்தனை எதிர்கால நோக்கு மறுமலர்ச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விசேட செயற்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் “மகிந்தோதய” தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் ரூபா 9.2 மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆலய வளாகத்திலுள்ள கோயிலில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. தொடரந்து பாடசாலை வளாகத்தில் மரம் நடுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், மாகாண கல்விப் பணிப்பாளர் வை.செல்வராசா மற்றும் உயர் அதிகாரிகள், கல்லூரி சமூகத்தினர் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.