இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு போதையில் பஸ்ஸைச் செலுத்திச் சென்ற சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரத்தை 6 மாத காலத்துக்கு இரத்துச் செய்தது நீதிமன்றம்.
அவருக்கு 500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். எம்.ஜெப்றி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை நடந்த வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
காரைநகரிலிருந்து குறித்த இ.போ.ச. பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்.பஸ்நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கும் பயணிகளை ஏற்றிய பின்னர் அந்த பஸ் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி நோக்கிப் புறப்பட்டது.
கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த ஒருவரே அதன் சாரதியாக அன்று புணிபுரிந்தார். அவர் மதுபோதையில் தள்ளாடியவாறு பஸ்ஸைச் செலுத்திச் செல்வது தொடர்பில் பயணிகள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பொலிஸார் குறித்த சாரதியைக் கைது செய்தனர். அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அவருக்கு 6 மாத தடையும் தண்டமும் விதிக்கப்பட்டது என்றார்.