எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.) என்பன இணைந்து போட்டியிடும் என்று, சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வு நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் தெரிவிக்கும்போதே மேற்கண்ட விபரங்களை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஈ.பி.டி.பி., சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இணக்கம் கண்டுள்ளன என்றும், 12 வேட்பாளர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவும், 24 வேட்பாளர்களை ஈ.பி.டி.பி. சார்பாகவும் தேர்தலில் நிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், சண்டே டைம்ஸ்சுக்கு தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற வேடபாளர் தெரிவில், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் உட்பட்ட சிலர் கலந்துகொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.