யாழ்.குடாநாட்டிலுள்ள இந்துக் கோயில்களில் இரவு 10மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என யாழ்.பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் நடைபெறுகின்ற இசை நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்கிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.குடாநாட்டில் உள்ள இந்துக் கோயில்களின் திருவிழாக் காலங்களில் நடாத்தப்படும் இசை நிகழ்ச்சியின் போது இளைஞர்களிடையே ஏற்படும் வாள் வெட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.குடா நாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் திருவிழாக்காலங்கள் ஆரம்பித்துள்ளமையினால் கோயில்களில் பாரிய குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் இறுதிநாள் நிகழ்வின்போது நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்குப் பின்னர் நடைபெறுவதினால் அவ் இசை நிகழ்ச்சி முடிவடைய இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகின்றன.
இதனால் இசை நிகழ்ச்சியைப் பார்க்க வரும் இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு தகராறுகளில் ஈடுபட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
அண்மையில் திருநெல்வேலியில் அமைந்துள்ள கொண்டலடி வைரவ கோயிலில் இசை நிகழ்ச்சியின்போது வாள் வெட்டு சம்பவம் ஏற்பட்டதில் இளைஞன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோயில்களில் இரவு 10 மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகளை நடாத்த தடைவிதிக்கவுள்ளோம் என்றார்.