வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது.
வீதியின் எதிர்ப்பக்கமாக சிறியதொரு தற்காலிகக் கொட்டகை அமைக்கப்பட்டுக் கருங்கல்லிலான ஐயப்ப சுவாமியின் திருவுருவம் அங்கே வைக்கப்பட்டுள்ளது.
சீமெந்தினால் கட்டப்பட்டுத் தினமும் பூசைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த சிறிய கோவிலில் ஐயப்பன் விரத நேரங்களின்போது மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பஜனை பாடி வழிபாடு செய்து வந்தனர்.
வீதியில் பயணிப்போர் பலரும் வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து ஐயப்பனை வணங்கிச் சென்றனர். அடிக்கடி பக்தர்கள் பொங்கல் செய்து தமது நேர்த்திக் கடனையும் நிறைவு செய்தார்கள்.
தற்போது இக் கோயில் இடிக்கப்பட்டுள்ளதால் அவ்விடம் பொலிவிழந்து காணப்படுகின்றது. கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஆலய மணிக்கட்டிடமும் தகர்க்கப்பட்டதினால் ஆலய மணியோசையும் கேட்பதில்லை.
முன்னர் கோயில் இருந்த கட்டிடத்துக்கு எதிர்ப்பக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிகக் கொட்டகை பொலிவிழந்து காணப்படுகின்றது.
பூசகர் வீதியில் நின்றவாறே ஐயப்பனுக்குப் பூசைகள் செய்யவேண்டி உள்ளதால் பக்தர்கள் மனவேதனைக்குள்ளாகியுள்ளனர்.