13 ஆவது திருத்தம் செத்துப் போய்விட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கின்ற நிலையில் 13 ஆவது திருத்தத்தை தீர்வாக கருத முடியாதென்று தமிழ் தேசிய மக்கள் முண்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாக அமைய முடியாதென்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தம் அமைய முடியாதென்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம் என்பதுடன் தீர்விற்கான பயணத்தில் 13 ஆவது திருத்தம் ஆரம்ப புள்ளியாகவும் இருக்கமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 26 வருடங்களாக நிராகரித்த 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்கள்; மட்டுமல்ல. அன்றிலிருந்து இன்று வரைக்கும் எல்லா அரசியல் கட்சிகளாலும் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஈ.பி. ஆர். எல். எப் மட்டுமே 1987 ஆம் ஆண்டிலிருந்து அதனை ஆதரித்து வந்தது. இந்தியாவின் ஆதரவு தமக்கு இருக்கம் என்ற நிலைப்பாட்டிலேயே வரதராஜப் பெருமாளும் வெற்றி பெற்றார்.
13 ஆவது திருத்தம் செத்துப் போய்விட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் நாடாளுமன்றத்தில் கூறினார். அதைப்பற்றி பேச தயார் இல்லை என்ற அளவிற்கு பேசியிருந்தார்.
இன்று அந்த கருத்துக்கள் தலைகீழாக மாறியுள்ளதுடன் தீர்விற்கான ஆரம்ப புள்ளியாக 13 ஆவது திருத்தத்தை வைப்பதற்கு ஒருசிலர் முயற்சிக்கின்றனர் அதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் மக்களும் அனுமதிக்ககூடாது என்றும் அவர் கூறினார்.