யாழ் மணியந்தோட்டம் ஐந்தாவது ஒழுங்கை பகுதியில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த, இயேசுவின் திருச்சொரூபம் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
திருச்சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூட்டை கற்களால் எறிந்து உடைத்த விஷமிகள், பின்னர் திருச்சொரூபத்தையும் கீழே தள்ளி உடைத்துள்ளனர்.
இதனால் திருச்சொரூபம் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தையிடமும், கிராம சேவையாளர் ஊடக யாழ்.பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணியந்தோட்ட சந்தியில் இருந்த, மாதா சொரூபமும் இவ்வாறு சேதமாக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் இன்னுமொரு சொரூபம் அதே பகுதியில் உடைக்கப்பட்டுள்ளது.