வடக்கு மாகாண சபை தேர்தலை குழப்புவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் இந்நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி வடமாகாண சபை தேர்தல் நடக்குமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவருக்குமிடையிலான கலந்துரையாடல் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டினை ஜனாதிபதி யூன் மாதம் அறிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு மாகாண சபை தேர்தலினை சில கட்சிகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புக்கள் பிரச்சினையாக இருக்க முடியாது. தென்னிலங்கையில் தீக்குளித்த பிக்கு ஒரு கள்ளத்தனமானவர். அவர் சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் அரசாங்கத்திற்குள் அவர் சம்பந்தமாக நல்ல அபிப்பிராயம் இல்லை. அந்த சந்தர்ப்பத்தினை சிலர் பயன்படுத்தப் நினைக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆளுங்கட்சியிலுள்ள சில கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் தேர்தல் நடக்குமா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இவைகள் எல்லாம் ஒரு தடையாக இருக்க முடியாது. எவ்வாறான தடைகள் வந்தாலும் தேர்தல் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண சபைத் தேர்தலில் 4 பேர் அரசு சார்பாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அவ்விடயம் தொடர்பாக வினவிய போது,
தனித்து போட்டியிடுவதும், சேர்ந்து போட்டியிடுவதென்பதும் இறுதி முடிவல்ல என்று பதிலளித்த அமைச்சர் ஏதோ ஒரு வகையில், முதலமைச்சர் பதவிக்குள் வருவேன் என்றும் அதனை மக்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டுமென்றும் பதிலளித்தார்.
அதேவேளை, தேர்தல் நடாத்துவதென்பது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்ட விடயம், சில கட்சிகள் அதை தடுக்க நினைத்தாலும் அதை மீறி வடக்கு மாகாண சபை தேர்தல் நடக்குமென்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
இதன் போது, வடக்குமாகாண சபை தேர்தல் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பிய போது, தனியாக போட்டியிடுவது மற்றையது சேர்ந்து போட்டியிடுவது என்ற இரு நிலைப்பாட்டில் கட்சி இருப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக முடிவெதுவும் இதுவரையிலும் எடுக்கவில்லை முடிவு எதுவாக இருந்தாலும் அந்த முடிவை ஏற்பதற்கு தயாரென்றும் அமைச்சர் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்தி