எந்தவிதமான காரணமும் தெரிவிக்காது தனது வீட்டினுள் பொலிஸார் அத்துமீறி நுழைந்ததுடன் தேடுதலும் நடத்தியமை தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வருபவரான அரச உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தத் தகவலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப் பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.சுதுமலை வடக்கு, மானிப்பாயில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீடு ஒன்றிலேயே கடந்த 25 ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸார் சென்று இவ்வாறு தேடுதல் நடத்தியுள்ளனர்.
தான் ஒரு அரச உத்தியோகத்தர் என்று குறித்த நபர் தெரிவித்தார் என்றும் ஆயினும் அவரது அனுமதி பெறப்படாமலும் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் எனினும் தேடுதலுக்கான காரணம் எதுவும் இதுவரை கூறப்படவில்லை என்று கடந்த 27 அம் திகதி உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் விளக்கம் கேட்டு அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கனகராஜ் மேலும் தெரிவித்தார்.