10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட யாழ். மேல் நீதிமன்றமே மேற்கண்டவாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த குறித்த நபருக்கே மேற்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவரை ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டார்.
அவருக்கு எதிரான வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால், யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போது, தற்போது தனக்கு 16 வயது என்றும் தான் சாதாரண தரத்தில் கல்வி கற்று வருகின்றதாகவும் தெரிவித்தார்.
புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த நான் 3ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த நபரின் இரு பிள்ளைகளுடனும் விளையாடுவதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அப்போது, அவரின் மனைவி வீட்டில் இல்லை நான் அவரின் இரு பிள்ளைகளுடனும் விளையாடிக் கொண்டு வீட்டின் தூணை கட்டி பிடித்துக் கொண்டு நின்ற வேளை, எனது வாயையும் மூக்கையும் இறுகி அமர்த்திய படி வீட்டிற்குள் இழுத்து சென்று என்னை துஷ்பிரயோகம் புரிந்தார்.
அவரது வீட்டிலிருந்து வந்த நான் நடந்தவைப்பற்றி எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அம்மா என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார் என்று சாட்சியமளித்தார்.
அத்துடன் சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது சாட்சியங்களின் பிரகாரம் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளன.
சந்தேகநபர் நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளதாக அறிவித்த ஆணையாளர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிற்காக 7 வருட கடூழிய சிறைத்தண்டணையும், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் புரிந்த குற்றச்சாட்டிற்காக 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் அவருக்கு விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த இரு தண்டணைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 இலட்சம் ரூபா நட்ட பணம் கொடுக்க வேண்டுமென்றும் அறிவித்தார்.
நட்ட ஈடு செலுத்த தவறின் மேலதிகமாக ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா குற்றப்பணமும் செலுத்த வேண்டுமென்றும், குற்றப்பணம் செலுத்த தவறின் 2 மாத கால சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்துள்ளார்.