குடாக்கடல் பகுதியில் இடிதாங்கிகளை உடனடியாக அமைத்து உதவுங்கள்; பாஷையூர் கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை

thander-ediமண்டைதீவு, பூநகரி மற்றும் கேரதீவு போன்ற முக்கிய இடங்களில் அதிசக்தி வாய்ந்த இடி தாங்கிகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஷையூர் புனித அந்தோனியார் கிராமிய கடற்றொழில் அமைப்பு யாழ்.அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கம் காரணமாக யாழ்.குடாக்கடலை அண்டிய பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. அதனையடுத்தே கிராமய கடற்றொழில் அமைப்பு மேற்படி அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாஷையூர் புனித அந்தோனியார் கிராமிய கடற்றொழில் அமைப்பு யாழ். அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்.குடாக்கடலை அண்டிய பகுதிகளில் இடிதாங்கிகளை அமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக தங்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

அண்மையில் ஏற்பட்ட இடி மின்னல் மற்றும் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக பத்திரிகைகளும், செய்தி ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.

அன்றையதினம் குடாக்கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த எமது தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் ஏற்பட்ட இழப்புக்கள் சொல்லில் அடங்காதவை. வயது வித்தியாசமின்றி ஒவ்வொரு தொழிலாளர்களும் தம் வாழ்நாளில் இவ்வளவு பயங்கரத்தை அனுபவித்ததில்லை என்று கூறும் அளவுக்கு அதன் தாக்கம் அமைந்திருந்தது.

ஒவ்வொரு வருடமும் இரண்டு, மூன்று தடவைகளுக்கு மேல் குடாக்கடலில் இடிமின்னல் தாக்கம் ஏற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முறையும் முன்னையதைவிட சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.

பாஷையூரை அண்டிய கடற் பிரதேசத்தின் ஒரு பகுதியை இடிமின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக 2004 ஆம் ஆண்டு பாஷையூர் கடற்றொழில் சங்கமானது அந்தோனியார் கோயில் கோபுர உச்சியில் சுமார் 75ஆயிரம் ரூபா செலவில் இடிதாங்கி ஒன்றைப் பொருத்தியிருந்தது.

ஆனால் அதுவும் தற்போது செயலிழந்துள்ளது. அதனை மீளப் புனரமைத்தாலும் குறிப்பிட்ட சுற்றுவட்டத்தையே அது பாதுகாக்கும்.

எனவே கடற்றொழிலாளர்க ளின் நலன்கருதி மண்டைதீவு, கல்முனை (பூநகரி), தலைமுனை (கேரதீவு) போன்ற முக்கியம் வாய்ந்த முனைப் பகுதிகளில் சக்தி வாய்ந்த இடிதாங்கிகளைப் பொருத்தி கடற்றொழிலாளர்கள் அச்சமின்றித் தொழில் செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது.

இதன் பிரதிகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலர், நீரியல்வள உதவிப்பணிப்பாளர், யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனம், யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Posts