வடக்கில் நாம் பெரும் படைக்குறைப்பை மேற்கொண்டுள்ளோம் போர்க்காலத்தில் யாழ். மாவட்டத்தில் 16 இராணுவ முகாம்கள் இருந்தன. தற்போது 3 இராணுவ முகாம்கள் மாத்திரமே அங்குள்ளன என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியா தெரிவித்துள்ளார்.
அரச வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் நாம் படையினரை நிலை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பில், சர்வதேச சமூகம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கின்றது. போர் முடிந்த பின்னர் எங்கள் படையினரை எங்கு வைத்திருப்பதென்பதை தீர்மானிப்பதற்குச் சர்வதேச சமூகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது. என்றும் அவர் கூறினார்.
இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் நெருக்கமாக இருந்த பகுதிகளிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் ஆட்லறித் தாக்குதலை மேற்கொண்டனர். அவர்களே பொதுமக்களின் இழப்புக்கு காரணமாயினர்.
போரின் பின்னர் படையினர் வடபகுதியில் மக்களுக்குப் பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.