நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புங்குடுதீவைச்சேர்ந்த பெண் ஒருவரையே அங்கு கடமையில் இருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
புங்குடுதீவைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குச் கடந்த வியாழக்கிழமை சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
வழிபாடுகளை முடித்துக்கொண்ட குறித்த பெண் தான் ஆலயத்திற்கு நகைகள் தானம் செய்வதாகக் கூறி தான் கொண்டு வந்த நகைகளை ஆலய நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார்.
தான் தானமாக கொடுத்த நகைகளின் பெறுமதி 2 இலட்சம் ரூபா என்றும் தெரிவித்ததுடன் அந்த பெறுமதிக்கான பற்றுச்சீட்டினையும் வாங்கிக்கொண்டுள்ளார்.
தானமாக கொடுத்த நகைகள் மீதும் அந்த பெண்ணின் நடவடிக்கையின் மீதும் சந்தேகம் கொண்ட ஆலய நிர்வாக சபையினர் நகைகளைச் சோதனை செய்த போது, அது போலி நகைகள் என்பது தெரியவந்தது.
இந்த போலி நகைகள் தொடர்பில் குறித்த பெண்ணிடம் நிர்வாகத்தினர் விசாரித்த போது ஆலய நிர்வாக சபையினரை தகாத வார்த்தைகளினால் குறித்த பெண் ஏசியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் ஆலய வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களும் சில மணிநேரம் பதற்றமடைந்தனர்.