தமிழ்மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த தேரர்கள் 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இலங்கை கல்வி அமைச்சின் பிரிவினாக் கிளையினால் நடத்தப்பட்ட வெளிக்கள தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிக்குகளுக்கே இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த சான்றிதழ் வழங்கும் வைபவம், யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கோப்பாய் கல்வியற் கல்லாரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
தென்னிலங்கையில் தமிழ் கற்று வந்த தேரர்களே கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணத்தில் கள பயிற்சியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கான தமிழ் மொழி மூலம் கலந்துரையாடுவது தொடர்பான பயிற்சிகள் வெளிக்களத்தில் வைத்து வழங்கப்பட்டன.
சான்றிதழ் வழங்கும் இந்த வைபவத்தில் தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றி வைக்க கல்வியற் கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் பாடினார்கள்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை பிரிவினா கல்விப் பிரிவின் தமிழ்மொழி ஆலோசகர் உயங்காவே ஞானரத்னதேரர் 51 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் பர்ணாந்து, விசேட அதிரடிப் பொலிஸாரின் யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரி வாஸ்பெரேரா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திலகரட்ணா வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், முன்னாள் கல்வியற்கல்லூரி பீடாதிபதி எஸ்.கே.யோகநாதன், கலப்பத்தை சமிந்தானந்ததேரர் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.