விரும்பியோ விரும்பாமலோ பல்வேறு குற்றங்கள் புரிந்தவர்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள். இங்கு வந்த நீங்கள் எல்லோரும் வெளியேறும் போது மீண்டும் தவறு புரிபவர்களாக இல்லாது பண்புள்ளவர்களாக வெளியேற வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும் என யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டிற்காக கைதிகளிடையே விளையாட்டுப் போட்டி நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தவறுகள் செய்கின்றவர்களை நல்லவழிப்படுத்துவதே சிறைச்சாலைகளின் நோக்கம். விரும்பியோ விரும்பாமலோ குற்றங்கள் செய்பவர்களை எதிர்காலத்தில் நல்வழிப்படுத்தி மீண்டும் தவறிழைக்காதவர்களாக வெளியேறவேண்டும் என்பதே எமது விருப்பம்.
இடவசதிப்பற்றாக்குறையுடன் தற்காலிக இடத்தில் யாழ்ப்பாண சிறைச்சாலை நடைபெற்று வருகின்றது. எனினும் இந்த சிறைச்சாலைக்கான புதிய கட்டடம் விரைவில் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
புதிய கட்டம் நவீன வசதிகள் கொண்டு அமைக்கப்படுவதுடன் மண்டப வசதிகள் , கலாச்சார நிகழ்வுகள், மொழி இலக்கிய நிகழ்வுகள், கைதிகளது முயற்சியினை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு பயிற்சிகள், வழிகாட்டிகள்,என்பன நடாத்தப்படும்.
இங்குள்ளவர்கள் அனைவருக்கும் எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஏ.சி பெரேரா தலைமையில் சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் தலையணை சண்டை, யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.பரமராஜா, மாவட்ட நீதிபதி ஏ.ஏ ஆனந்தராசா, சிறைச்சாலை நலன்புரிச் சங்க தலைவி செல்வி சாந்தா அபிமனசிங்கம், பிரதான ஜெயிலர் எஸ். இந்திரகுமார், நலன்புரி சங்க உத்தியோகத்தர் சுசிதரன் மற்றும் நலன்புரிச்சங்க உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.