யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் ஒன்றியத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவ்வொன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சிறிராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உரைநிகழ்த்தினர்.
நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது. ஓன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கவனம் செலுத்தப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக வரிக்கட்டண உயர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை, புதிய அலுவலகத்தை நவீன சந்தை மேல்மாடியில் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இதனிடையே ஒன்றியம் எதிர்காலத்தில் எதிர்நோக்கக் கூடிய தடைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் அதேவேளை, இவ்வொன்றியம் எதிர்காலத்தில் தனது சேவைகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டுமென்றும் இதன்போது அமைச்சர் அவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இங்கு உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், நாம் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் வெறுமனவே தேச விடுதலைக்காக மட்டுமோ, ஜனநாயக வழிமுறையில் உழைத்துக் கொண்டிருக்கும் இன்று நாம் வெறுமனவே அரசியலுக்காக மட்டுமோ குரல் கொடுப்பவர்கள் இல்லை. அன்றிலிருந்து இன்று வரை அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக தொடர்ந்து போராடியும், வாதாடியும் வருகின்றோம்.
எமது மக்களின் வாழ்வியல் எழுச்சி, வறுமையில் இருந்து எழுவதற்கான மீட்சி, அழிந்து போன எம் தேசங்களை மறுபடியும் தூக்கி நிறுத்துவதற்கான அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை, சுதந்திரம் ஆகியவற்றிற்காகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கட்சித் தோழர்களும் உறுதியுடன் உழைத்து வருகின்றனர்.
இதனைத் தவிர வேறெந்த அரசியல் கட்சிகளும் உங்களது உரிமைகளை மீட்டுத்தரப் போவதில்லையென்பதே கடந்தகால வரலாறு எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) ஓன்றியங்கள் துணைச் சங்கங்களின் இணக்கப்பாட்டுடனும் ஆதரவுடனும் இயங்கவேண்டுமென்பதுடன், கடந்தகாலத்தில் யாழ். மாவட்ட சிகையலங்கரிப்பாளர் சங்கங்கள் சரிவர இயங்காத சூழல் காணப்பட்டது. எனவே இக் குறைபாட்டை நீக்கும் வகையில் பொருத்தமான நிர்வாக ஆளுமைமிக்க சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற தேவை எம்முன்னே எழுந்தது.
இச் சங்க உருவாக்கத்தின் மூலம் நீங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கான வழிவகைகள் ஏற்படும். இவ் ஒன்றிய உருவாக்கத்தில் இரண்டு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது ஒன்று நிர்வாகத் தெரிவு மற்றையது ஒன்றியச் செயற்பாடுகள் என்பன எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதே அதுவாகும்.
எனவே உருவாக்கப்பட்ட ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நிலைய உரிமையாளர்கள் சரியான வகையில் செயற்பாடுகளையும் தங்களது தொழில் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் இதேபோல் உங்களது குறைபாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகளையும் வகுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.