சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும், மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார், பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்படவேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி,கரைச்சிப் பிரதேச சபையின் வளாகத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:-
- அரச, அரச சார்பற்ற, தனியார் ஊழியர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும் என்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அடித்தட்டு மக்களின் வருமானத்திற்கும், வாங்கும் சக்திக்கும் ஏற்ப குறைக்கப்படவேண்டும்.
- போர் காரணமாகவும், இராணுவ ஆக்கிமிப்புக் காரணமாகவும் அகதிகளாய், அனாதரவாய் வாழ்விழந்தோருக்கு நட்டஈடும் , நிவாரணமும் வழங்கவேண்டும் என்பதுடன் தமிழர்களையும் மனிதர்களாக மதிக்கின்ற பண்பு உருவாக்கப்பட்டு, முழுமனித வளர்ச்சிக்குரிய ஊட்டச்சத்து வழங்கவும் வேண்டும்.
- இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான மக்கள் நிலங்களும், கடலும் உடனடியாக விடுவிக்கப்பட்டு அப்பிரதேசமக்கள், அக்காணிகளுக்குச் சொந்தமான மக்கள் மீளக்குடியேற்றப்படவேண்டும்.
- தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார், பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்படவேண்டும்.
- இலங்கையில் தமிழினப் பிரச்சினைக்கு அம்மக்கள் தாயகத்தில் ஆளும் உரிமை அங்கீகரிக்கப்பட்டு சிறந்த அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
- அரசின் சிறந்த முகாமைத்துவமின்மையாலும், திட்டமிடலில்லாமையாலும் அரச திணைக்களங்களிலும் பொதுத்துறைகளிலும் ஊழல் நிறைந்து விட்டதாலும், ஊதாரித்தனமான செயல்களினாலும் பெற்றோல, டீசல், மண்ணெய் மற்றும் மின்சாரம் பெறுவதில் வரிச்சுமை அதிகரித்தும், உற்பத்தி குன்றியும,கடன்கள் அதிகரித்தும் மக்கள் வரிச்சுமையால் வதைக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட வேண்டியுள்ளனர். வரிச்சுமையிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வேலையற்று, நிலமற்று எதிர்காலமற்றுள்ள மக்களுக்கும் நிலமும், நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.
- போர் காலத்தில் கொல்லப்பட்டோர், காணமல் போனோர் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணை நடத்தப்பட்டு அதனடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- வேலையற்ற இளைஞர், யுவதிகள், பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
- கல்வித்துறையில் அரசியல் மற்றும் இராணுவத் தலையீடற்ற நிர்வாகமும், மொத்தநிதி ஒதுக்கீட்டில் 6வீதத்திற்கும் மேலான நிதி ஒதுக்கீடும் வேண்டும்.
- தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் குடிப்பரம்பலைக் குலைத்துவரும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும்பாலான அங்கத்தவ நாடுகளினால் (2012லும்,2013லும்) இரண்டு தடவைகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், பொறுப்புக் கூறும் கடப்பாட்டை நிறைவேற்றவும் வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.
- சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக தத்துவங்களையும், கருத்தியல் சுதந்திரத்தையும் அரசு அங்கீகரிப்பதுடன் ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளல்களுக்கும் தகுந்த பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
மனித உரிமைகளுக்கெதிரானதும், மனிதாபிமான சட்டதிட்டங்களிற்கு எதிரானதுமான ஜனநாயக விரோத ஆட்சிக்கெதிராக ஒருமித்து குரல் கொடுக்கவும் ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அழைக்கிறது.