கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ளது
அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் நில ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்குமாக எதிர்வரும் 2ம் 3ம் திகதிகளில் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தல் என்ற தீர்மானத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.
காலை 7:00 மணிக்கே தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கூடிய மக்கள் 11:00 மணியை அண்மித்த போது பல மடங்காக மாறியினர்.ஒரு கட்டத்தில் எதிர்ப்புக்களையும் மீறி மக்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழையவும் முற்பட்டு நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுள்ளதென எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆராய்வதற்கும் அது தொடர்பில் தீர்மானங்களை வகுப்பதற்கும் எதிர்வரும் 2ம் 3ம் திகதிகளில் மீளவும் ஒன்று கூடுவது என்ற தீர்மானத்துடன் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுடன், போராட்டத்தின் நிறைவில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் உச்சநீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்காக பெருமளவு மக்கள் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் போராட்டங்கள் அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பொலிஸாரினதும் இராணுவத்தினரதும் கெடுபிடிகள் இன்று அதியுச்சக் கட்டத்தை எட்டியிருந்ததை காணமுடிந்தது.
காங்கேசன்துறை வீதி வழியாக தமது காணிகளுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி உயர் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த மக்களை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திறக்கு அருகாமையில் வைத்து கலகம் அடக்கும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தினர். மீண்டும் மக்கள் பிரதேச செயலகத்தினுள் நுழைவதற்கு முயன்றும் பொலிஸார் தடுத்து நிறுத்திய நிலையில் பிரதேச செயலகத்தின் முன்னால் கூட்டமொன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசாஇ எஸ்.ஸ்ரீதரன்இ எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரிஇ தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
‘ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்றால் கைது செய்வோம்’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.இந்த ஆர்பாட்டத்த்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் திரண்டு வீதிக்கு குறுக்காக வந்து காங்கேசன்துறை வீதியூடாக நடந்து சென்றனர். அங்கு வந்த பொலிஸார் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கு சுரேஸ் எம்.பி, ‘எம்மைக் கைது செய்ய முடியுமானால் கைது செய்யுங்கள்’ என்று பதிலளித்தார். தொடர்ந்து வீதியில் மக்கள் ஒன்றுகூடி அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
‘எமது நிலத்திற்கு எங்களைப் போகவிடுங்கள் அல்லது நச்சு தந்து எங்களை கொன்றுவிடுங்கள்’ வலிகாமம் வடக்கு மக்கள் தெரிவித்தனர். ‘1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் நிலம் எங்களுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எமது நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்ற செய்தி பேரிடியாக உள்ளது’ என்றும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலாக எமக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கு நாங்கள் ஒரு போதும் சம்மதிக்கமாட்டோம். எனவே இனியும் நாங்கள் எங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்து ஏதிலிகளாக வாழமுடியாது. எங்கள் நிலங்களுக்கு எங்களை போகவிடுங்கள்’ என்று மண்ணை வாரித்தூவி இம்மக்கள் கோரிக்கை விடுத்துனர்.