வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது,
‘அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால் இலக்கை அடைந்து விட முடியாது. அவ்வாறு உடைத்து உடைத்து 8 மாகாணங்களில் தேர்தலை நடத்தி விட்டது. மீதியாக இருப்பது வடக்கு தேர்தல் மாத்திரமே. இந்த வட மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
வடக்கு மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன் சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டும், குறிப்பாக பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழ, நீதித்துறை ஆணைக்குழு போன்றவை நியமிக்கப்பட வேண்டும. இந்த விடயம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று அரசாங்கம் ஜெனீவாவிலும் வாக்குறுதி வழங்கியுள்ளது.
சிவில் ஆளுநர் நியமனம் வேண்டும்
வடக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். வடக்கில் சுதந்திரமான ஒரு தேர்தலை அரசாங்கம் நடாத்த வேண்டுமென்றும், இ;த் தேர்தலை நடாத்தவதற்கு முன் குறிப்பாக, தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பகம் இலங்கைக்கு கொண்டு வரவேண்டும்.
அதேவேளை, அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் கொடுப்பதுடன், எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டுமென்றும், அத்துடன், வடமாகாண சபை தேர்தலை நடாத்தமாயின் தேர்தலை நடத்தும் முன், சகல தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அதே சமயம் தெற்காலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஆளுநரை நியமிக்க வேண்டும்.
அவ்வாறு நியமிக்காவிடின் இங்கு சுதந்திரமான தேர்தல் ஒன்றிணை எதிர்பார்க்க முடியாது. வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கம் ஜெனிவாவிலும் அறிவித்துள்ளது. அவ்வாறு, தேர்தலை நடத்துவதற்கு முன் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்க முடியும். அத்துடன், சுதந்திரமாக இந்த அமைப்புக்களை முன்வைத்து தேர்தல் நடத்தினால், எந்த முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்போம்.
காணி சுவீகரிப்புக்கு தீர்வு
வடக்கில் நிலவுகின்ற காணி சுவீகரிப்பு மற்றும் ஏனைய விடயங்களுக்கான தீர்வினை பெற்றுகொண்டே வடக்கை விட்டு வெளியேறுவேன். யுக்ழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட வேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.
அத்துடன், யாழில் 4 நாட்கள் இருப்பேன். இந்த நாட்களில் யாழில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிடவுள்ளேன். அதற்குப் பின்னர், இவ்வாறான விடயங்களுக்கான தீர்வினை பெற்றுத் தந்துவிட்டே வடக்கை விட்டு வெளியேறுவேன்’ என்று உறுதியளித்தார்.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க உட்பட டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிந்திக்கிடைத்த தகவலின் படி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினால் சுவீகரிக்கபடும் காணிப்பகுதிகளுக்கு செ்ல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது.