வடக்கு கிழக்கில் சிங்கள, பௌத்த தேசிய வாதஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள் உண்மையில் எடுக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த நிலப்பரிப்பை அரசியல் ரீதியாக தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சிங்கள, பௌத்த தேசிய வாதத்தின் ஆதிக்கம், வட கிழக்கில் அதிகரித்துள்ளது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படியான ஒரு நிலைமை உருவாகாமல் இருக்கும் வரைக்கும் இப்படியான ஒரு செயற்பாடுகளை நாம் ஒரு போதும் தடுக்கவே முடியாது.
ஒரு கட்டம் இப்படியான செயற்பாட்டிற்கு நேரடியாக எதிர்க்கின்றோம். என்ற நிலைப்பாட்டினை கொண்டு வர வேண்டும். மக்கள் பலத்தினை காட்டி செயற்படுத்த வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் பார்வையில் இடைக்கால நிர்வாகத்தை வடக்குகிழக்கில் உருவாக்கவேண்டும்.
இன்று நடக்கும் நிலப்பறிப்பனை நிறுத்தா விட்டால், தீர்வு குறித்து கதைக்கும் நேரத்தில் ஒன்றும் இருக்காது.
இங்கு நடைபெறும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்காவிடின், அடுத்த 5 வருடத்தில் இதைப்பற்றி பேசி பிரியோசனம் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழர் தாயகத்தில் 20 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரால் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளை அபகரிக்கப்பட்டு வருகின்றது. இன்று இலங்கை சட்டத்திற்கு அமைவாக சட்ட பூர்வமாக நிலங்களை அபகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களை அணுகினார்கள். அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், நாளை( 24-04-2013) போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளோம்.
நாளைய ( 24-04-2013) போராட்டம் ஒரு ஆரம்ப புள்ளியாகும். நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்குமளவிற்கு இந்த போராட்டம் விஸ்தரிக்கப்படும். வலி வடக்கிற்கு மட்டுமன்றி தமிழர் தாயக பிரதேசங்கள் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவிற்கு இந்த போராட்டம் விஸ்தரிக்கப்படும்.
அனைத்து பிரதேச மக்களையும் ஒருங்கிணைத்து தங்களின் மக்கள் பலத்தினை நிரூபித்து ஆக்கிரமிப்பினை நிறுத்துவதற்கு தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது என்றார்.