இராணுவப் பாதுகாப்பு பட்டாலியன் தலைமையம் அமைப்பதற்கு வலிகாமம் வடக்கில் 6381 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் சுவிகரிக்கப்பட்டுள்ளது.
காணி சுவிகரிப்புச் சட்டத்தின் அத்தியாயம் 460 (2) ஆம் பிரிவின் கீழே குறிப்பிட்ட காணி சுவிகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் 8 கிராம அலுவலர் பிரிவை உள்ளடக்கிய பிரதேசத்திலேயே இந்த நில அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இந்தக் காணியின் உரிமையாளர்கள் இனங்காணப்படாத காரணத்தினால் இந்த காணி அபகரிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காணி அவிவிருத்தி அமைச்சின் யாழ் மாவட்ட காணி சுவிகரிப்பு அதிகாரியினால் பிரதேச செயலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபத்தின் பிரகாரம் இந்த அபகரிப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதி இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் அறிவித்தல் பலகையினை நாட்டும் செயற்பாடு நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பிரதேச செயல உத்தியோகஸ்தர்கள்,பட்டதாரி பயிலுனர்கள் ஆகியோரால் இந்த அறிவித்தல் பலகை நாட்டும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் வாழ்ந்த 7 ஆயிரம் குடும்பங்கள் தற்போது யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் தனியார் காணிகளிலும் முகாம்களிலும் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் தங்களுக்கு சொந்தமான பகுதியில் அரசாங்கம் விரைவில் மீள்குடியேற்றம் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் வாழ்ந்து வரும் நிலையிலேயே அரசாங்கம் இராணுவத்தேவைக்காக இவ்வாறு காணியை சுவிகரித்துள்ளது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.