வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை அந்தந்த காணிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இதன்படி பிரதேசத்தில் 6400ஏக்கர் நிலம் 7கிராமசேவகர் பிரிவுகளில் ஆக்கிரமிக்கப்படுவதுடன், இராணுவத்தின் பற்றாலியன்களுக்கான தலைமையகம் அமைப்பதற்கென கூறியே குறித்த நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது.
வடக்கில் 5 மாவட்டங்களிலும் அண்மையில் காணி அமைச்சினால் காணி சுவீகரிப்பு அலுவலகம் திறக்கப்பட்டபோது இந்த திணைக்களத்தினால் காணிப் பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்படும் என கூறப்பட்டது.
ஆனால் திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட ஆகியிருக்காத நிலையில் 5 மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சுவீகரிப்பு என்ற பெயரில் இராணுவத்தினருக்காக ஆக்கிரமிக்கப்படுகின்றது.
இதன் ஒரு கட்டமாக வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விழுங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இந்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
மேலும் ஆக்கிரமிக்கப்படவுள்ள காணிகள் யாருடையவை என தமக்கு தெரியாது என்ற கருத்தும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளது.
இதேபோல் வலிகாமம் வடக்கில் 3ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் மட்டுமே படையினரிடம் இருப்பதாக யாழ்.இராணுவத் தளபதி கூறிவந்த நிலையில் 7 கிராமசேவகர் பிரிவுகளில் மட்டும் 6400ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்படுவதன் மூலம் வலிவடக்கு மற்றும் கிழக்கில் எத்தனையாயிரம் ஏக்கர் நிலம் இராணுவத்தினரிடம் உள்ளது என்பது வெளிச்சம்.
மேலும் குறித்த காணிகளுக்கான உரிமையாளர்கள் இல்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை என கூறப்படும் நிலையில் அந்த காணிகளுக்குச் சொந்தமான மக்கள் இடம்பெயர்ந்து இன்று யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கும் 10வரையான இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.