யாழ்.குடாநாட்டில் பெண்கள், சிறுவர்களுடன் இயங்கும் இல்லங்கள், நிறுவனங்கள் எவற்றிலும் ஆண்களைப் பணிக்கு அமர்த்த முடியாது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.கைதடியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் துஷ்பிரயோகம் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவற்றைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் கேட்டபோதே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் தடுப்பது அனைவரது பொறுப்பாகும் என்றும், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இப்;பொறுப்புள்ளதாகவும் சுட்டிக் காட்டிய அரசாங்க அதிபர் தனித்து அரச அதிபராகவோ, அல்லது எமது உத்தியோகத்தர்களாலோ அதனைச் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் பொறுப்பிலுள்ள உத்தியோகத்தர்கள் காலக்கிரமத்தில் சகல சிறுவர் இல்லங்களுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்வதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களை யாரும் வெளிப்படுத்தாமல் இனங்காண முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் இனிவரும் காலங்களில் பெண்கள், சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இல்லங்கள், அவ்வாறான நிறுவனங்களில் எந்தப் பொறுப்பிலும் ஆண்கள் நியமிக்கப்பட முடியாது என்று தெரிவித்த அரசாங்க அதிபர் குறித்த இடங்களில் ஆண்கள் தேவையற்ற இடங்களில் உள்நுழையவும் முடியாது எனவும், இந்த நடைமுறை இனிவரும் காலங்களில் இறுக்கமாகப் பின்பற்றப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.