இனம் தெரியாத இருநாள் காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை மரணமடைந்தார்.
ஒரு பிள்ளையின் தாயான சாவகச்சேரியைச் சேர்ந்த மோகனதாஸ் அஸ்வினி (வயது-20) என்ற இளம் தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் சாவகச்சேரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று அதிகாலை அவர் மரணமடைந்தார்.
இந்தப் பெண்ணின் மரணம் குறித்து நேற்று விசாரணை நடத்திய திடீர் மரண விசாரணை அதிகாரி இவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இளம் தாயின் மரணம் தொடர்பில் யாழ்.சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிழந்த தாயின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது