இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம் நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது.
ராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதே இந்த பொதுமக்கள் உயிரிழப்புக்குப் பழிபோட்டிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி, பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய “விடுதலைப் புலிகள்தான் பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள். அது மட்டுமல்ல சிவிலியன் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து குண்டுத் தாக்குதல்களை அவர்கள் தான் நடத்தினார்கள். இந்தக் குற்றத்துக்கு முழுப்பொறுப்பும் அவர்கள்தாம் ஏற்கவேண்டும். இதை அவர்கள் செய்யாமல் இருந்தால், போரில் ஏற்பட்ட எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதம் நடந்திருக்காது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இந்த எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதத்துக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு.” என்றார் .
எனவே எதேச்சையான இந்த பொதுமக்கள் உயிர்ச்சேதம் என்று நீங்கள் சொல்லும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா. என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் “இந்த எதேச்சையான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பது யதார்த்தமானதுதான். இந்த விஷயம் போரின் இறுதிக்கட்டத்தில் சில காரணங்களால் வெளிவராத ஐ.நா மன்ற அறிக்கையில்கூட இதில் சுமார் 7700 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லலாம். இதில் விடுதலைப்புலிகளும் உள்ளடங்கியிருக்கலாம். இதில் கொல்லப்பட்ட சிவிலியன்கள் இந்த எதேச்சையாக கொல்லப்பட்டவர்களில் சிலராக இருக்கலாம், இவர்கள் விடுதலைபுலிகளின் பாதுகாப்புக்காக அவர்களால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கலாம்”, என்றார்.
போர்க்காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் என்று ஐ.நா மன்ற வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கை கூறியது, எனவே இது குறித்து ராணுவமே தன்னைத்தானே விசாரித்து, தன்னையே நிரபராதி என்று கூறிக்கொள்வதைவிட, ஒரு சர்வதேச விசாரணை மேலும் பொருத்தமானதாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் “இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பிரச்சனை விசாரிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியும், இதற்காகவே, வடக்கில் தமிழ் அதிகாரிகளைக்கொண்டு ஒரு மக்கள் தொகை கணக்கீடு நடத்தப்பட்டது. அவர்கள் தந்த அறிக்கையும் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 7400 இருக்கும் என்றே கூறியது” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், இதில் பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். இந்த நாடுகள் தங்கள் நாடுகளுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதை தருவதில் போதிய ஒத்துழைப்புக் காட்டவில்லை என்றார்.
மேலும் ராணுவ விசாரணை சர்வதேச விசாரணை என்றெல்லாம் கூறும் போது, இலங்கை ராணுவ சட்டமும் , பிரிட்டிஷ் ராணுவ சட்டத்திலிருந்து வந்ததுதான் என்பதை மறந்துவிடக்கூடாது. 1949ல் ராணுவம் உருவாக்கப்பட்டபோது இந்த சட்டம் உருவானது. பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படும் இதே நடைமுறைதான் இங்கும் பின்பற்றப்பட்டது என்றார் பிரிகேடியர் ருவான் வணிக சூர்ய.
இலங்கை ராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கையை விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இலங்கை அரசிடம் இருந்து இதைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கமுடியாது என்றார்.
போர்க்காலத்திலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில், போரில் சிவியல்ன்கள் வாழும் பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டோம் அது குறித்து எந்த வித நடவடிக்கையும் அரசிடமிருந்து இல்லை. இப்போது ஐ.நா மன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவே இதில் 40,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியது. அதன் உள்ளக அறிக்கை ஒன்று, இறந்தவர்களின் எண்ணிக்கை 70,000மாக இருக்கும் என்று கூறுகிறது, எங்களது ஆய்வின் படி, இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்துக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிறோம என்றார் அவர்.
இந்த விஷயத்தில் இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்த்தால் அது கிடைக்காது, ஒரு சர்வதேச விசாரணைதான் உண்மையை வெளியே கொண்டுவரும் என்றார் சுரேஷ் பிரேமசந்திரன்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கை அரசாங்கம் உண்மையை கண்டுபிடிக்காமல், நல்லிணக்கம் என்றெல்லாம் கூறுவதில் அர்த்தமிருக்கமுடியாது என்றார்.