காணாமற்போன தனது மகனின் வரவுக்காக கைதடி முதியோர் இல்லத்திற் காத்திருக்கும் மூதாட்டி

kaithady_elders_homeவன்னி யுத்தத்தின் போது தனது மகன், மகள், மருமக்கள், ஏழு பேரப்பிள்ளைகள் என அனைவரையும் இழந்து மீதமிருந்த ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த வயோதிபத் தாய் ஒருவர், அந்த மகனும் காணாமல் போய்விட்ட நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்திருந்தவேளை, திடீரென்று அவருக்குக் காணாமல் போன மகனிடமிருந்து தொலைபேசித் தொடர்பு கிடைத்துள்ளது.

சந்தனம் சூரியபுத்திரி (வயது -60) என்னும் மூதாட்டிக்குக் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கிவாழும் பூமணி (வயது-65) என்னும் மற்றுமோர் முதிய பெண் தன்னிடமிருந்த இரண்டு கைத்தொலைபேசிகளில் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.

அதனைப் பெற்றுக்கொண்ட அவர் தன்னிடமிருந்த பழைய சிம்காட் ஒன்றை அதற்குப் போட்டுத் தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அந்தக் கைத்தொலைபேசிக்குத் திடீரென்று அழைப்பொன்று கிடைத்துள்ளது.

தொலைபேசியை எடுத்துப் பேசிய அம்மூதாட்டிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த அவரது மகன் கதைத்தார்.

பழைய சிம்காட் நம்பருக்குத் தினமும் அழைப்பை மேற்கொள்வதாகவும், ஆனால் அன்றுதான் அழைப்புக் கிடைத்ததாகவும் கூறித் தாயாருடன் கதைத்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடித் திணறினார்.

பழைய நினைவுகளை மீட்டு விக்கி விக்கி அழுதார். 21 வயது நிரம்பிய மகன் தமிழகத்தில் நலன்விரும்பி ஒருவரின் உதவியுடன் படித்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் யாழ்ப்பாணம் வந்து தாயாரை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து மகனின் வரவுக்காக அந்த வயோதிபத்தாய் கைதடி முதியோர் இல்லத்தில் வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றார் என யாழ்.கைதடி முதியோர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts