சமாதானத்தின் பெறுமதியை உணர்ந்து கொள்ளவும்: ஹத்துருசிங்க

mahinda_hathurusingheசமாதானத்தின் பெறுமதியினை உணர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். பொலிஸாரும், 512 படைப்பிரிவினரும் இணைந்து யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் புதுவருட விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

2009 ஆம் ஆண்டிற்குப்பின்னரான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 30 வருட யுத்தத்தின் போது இழந்தவற்றினை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதினை மாற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்ட மக்கள் நீண்ட பயணம் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பதுடன், மக்கள் இப்போது சமாதானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை என்றும் அவர் கூறினார்.

துன்பங்கள், துக்கத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிக்கின்றோம், சமாதானத்தின் பின்பு யாழ். குடாநாடு எவ்வாறு முன்னேறி இருக்கின்றது என்பதனை பார்க்க கூடியவாறு இருக்கின்றது. யுத்த காலத்தின் போது யாழ். குடாநாடு எவ்வாறு இருந்தது. இப்போது எவ்வாறு இருக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ், முஸ்லிம், சிங்களம், என்ற வேறுபாடின்றி ஒரே நாடு, ஒரே குலம், ஒரே இனமாக வாழ வேண்டுமென்பதே எனது நோக்கம் என்றும் அவர் கூறினார். அதன் போது சமாதானத்தின் பெறுமதியினை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அரசியல் வாதிகள் எந்த நோக்கங்களும் இன்றி பிரசாரம் செய்து பல்வேறு வதந்திகள் பரப்பி வருகின்றார்கள். அத்துடன் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றார்கள்.

பொதுமக்கள் உண்மை நிலையை உணர்ந்து வாழ வேண்டும். யாழ். குடாநாட்டில் எந்த வித பிரச்சினைகளும் இல்லை. எந்த உதவிகள் தேவை என்றாலும், அதாவது கல்வி, மருத்துவம், வீட்டு தேவைகள் எவையாக இருந்தாலும், பொலிஸாரினதும், இராணுவத்தினரும் உதவுவதற்கு இருக்கின்றார்கள் எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts