யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்ததாக யாழ். மாநகர சபையின் சுகாதார குழு தலைவர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்தார்.
யாழ். கொட்டடி மீன் சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்களுக்கும் நாவாந்துறை பகுதி மீன் சந்தை வியாபாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாவாந்துறை மீன் வியாபாரிகள் 16 பேர், யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மீது வாள்வெட்டை மேற்கொண்டதுடன், தாக்குதல்களையும் நடத்தினர்.
இந்த வாள்வெட்டையும் தாக்குதல்களையும் மேற்கொண்டதாகக் கூறப்படும் 16 பேருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.
தங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் 16 பேரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் காயமடைந்த 5 ஊழியர்களுக்கும் சம்பளத்துடனான விடுமுறை உட்பட பாதுகாப்பு மற்றும் மருத்துவ செலவு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருக்க ஊழியர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனக் கோரியும் ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த தொழிற்சங்கப் போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி கோரிக்கைகளை இன்று திங்கட்கிழமை மாலை வேளையினுள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் இந்த தொழிற்சங்கப் போராட்டம் நடைபெறும் எனவும் யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் கூறினார்கள்.
இதேவேளை, இந்த தொழிற்சங்கப் போராட்டத்தில் ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இன்று திங்கட்கிழமை மாலை வேளையினுள் நடவடிக்கை மேற்கொள்வதாக யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, வாள்வெட்டு மற்றும் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் 16 பேரையும் இன்று திங்கட்கிழமை மாலை வேளையினுள் கைதுசெய்வதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.