யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 121 பேருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின்போது 5,432,511.78 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மின்சார சபையின் பொறியியலாளர் சங்கரப்பிள்ளை ஞானகணேசன் இன்று தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நேற்று புதன்கிழமை (27.03.2013) வரையான காலப்பகுதியில் மின்சார சபை சோதனை மேற்கொண்டது. இதன்போது மீற்றரில் திருத்தங்களை மேற்கொண்டவர்கள் மீதும் மின்சாரக் கம்பிகளில் வயர் கொழுவி சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள 5 நீதிமன்றங்களிலும் இவர்களை ஆஜர்படுத்தியபோது தண்டம் விதிக்கப்பட்ட நிலையில், மேற்படி தொகை வசூலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் புலோலி, கொட்டாவத்தை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, அல்வாய், பருத்தித்துறை, கரவெட்டி, பொலிகண்டி, கற்கோவளம், தும்பளை, குருநகர், கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் மீற்றரில் திருத்தங்களை மேற்கொண்டு மின்சாரம் பெற்ற 29 பேருக்கு 1,573,038 ரூபா தண்டமும் மின்சாரக் கம்பிகளில் வயர் கொழுவி சட்டவிரோத மின்சாரம் பெற்ற 24 பேருக்கு 2,419,10 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டன.
பெப்ரவரி மாதம் குருநகர், திருநெல்வேலி, உடுவில், கொக்குவில், இணுவில், மானிப்பாய், ஊர்காவற்றுறை, கரவெட்டி, யாழ்ப்பாணம், அச்சுவேலி, வேலணை, சுன்னாகம், சங்கானை, நீர்வேலி, தெல்லிப்பழை, புத்தூர், மல்லாகம், கற்கோவளம் போன்ற பிரதேசங்களில் மீற்றரில் திருத்தங்களை மேற்கொண்டு மின்சாரம் பெற்ற 27 பேருக்கு 2,051,906 ரூபா தண்டமும் மின்சாரக் கம்பிகளில் வயர் கொழுவி மின்சாரம் பெற்ற 12 பேருக்கு 2,243,148 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டன.
மார்ச் மாதம் அல்வாய், பருத்தித்துறை, அளவெட்டி, சுன்னாகம், ஏழாலை, கரவெட்டி, கந்தர்மடம், யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, சங்கானை, சண்டிலிப்பாய், குப்பிளான், வட்டுக்கோட்டை, சுழிபுரம், தெல்லிப்பழை பகுதிகளில் மீற்றரில் திருத்தங்களை மேற்கொண்டு மின்சாரம் பெற்ற 15 பேருக்கு 1,240,748 ரூபா தண்டமும் மின்சாரக் கம்பிகளில் வயர் கொழுவி மின்சாரம் பெற்ற 14 பேருக்கு 1,336,66 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் மொத்தமாக 121 பேரிடமிருந்து 5,432,511.78 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.