அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது தேசத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அல்ல, அது தமிழர்களை இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2013ஆம் ஆண்டுக்கான தேசத்தின் மகுடம் கண்காட்சி நிகழ்வு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
கடந்த 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் தமிழர்களை இன அழிப்புச் செய்த இராணுவ வெற்றியை வெற்றி விழாவாக அறிவித்த இலங்கை அரசாங்கம், அதனை கொண்டாடும் நிகழ்வாகவே இந்த தேசத்தின் மகுடம் கண்காட்சியை வருடாவருடம் நடாத்தி வருகின்றது.
இந்த தேசத்தின் மகுடம் கண்காட்சி தேசத்திற்கு மகுடம் சூட்டுவதற்கு பதிலாக இராணுவத்திற்கு மகுடம் சூட்டுவதாகவே அமைந்துள்ளது. பெரும்பாலும் முழுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்ட விடயங்களை இந்த கண்காட்சியின் ஊடாக காட்சிப்படுத்தியுள்ள அரசாங்கம், இந்த கண்காட்சியின் ஊடாக தமிழர் பகுதிகளில் நடத்தப்பட்ட யுத்தத்தினையே முழுமையாக நினைவுபடுத்தியுள்ளதாக தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதைவிட இந்தக் கண்காட்சியில் இலங்கை அரசாங்கம் மிகப் பெரிய தமிழ் மொழிப் படுகொலையை நடாத்தி தமிழ் மக்களை அவமானப்படுத்தியுள்ளது.
கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ள அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழை அரசாங்கம் கொலை செய்துள்ளது. அது மட்டுமல்ல மஹிந்த சிந்தனையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் எல்லா வேலைத்திட்டங்களிலும் தமிழ் இருப்பதில்லை சிங்களச் சொற்களையே தமிழில் எழுதவேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழர்களுக்கு உண்டு.
இந்த செயலின் ஊடாக இலங்கையில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எவ்வாறான முக்கியத்துவத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்.
வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் போராளிகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும்போது பெருந்தொகை பணத்தினை செலவு செய்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு என்ன தேவையுள்ளது.
அரசாங்கம் தொடர்ந்தும் சிங்கள மக்களினதும் தங்களது ஆட்சி அதிகார நலன்களையும் பேணுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதே தவிர இதில் தமிழர்களை ஒரு பொருட்டாக கணிப்பிடுவதேயில்லை.
உண்மையில் சொல்லப்போனால் ஓராயிரம் தடவை ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தாலும் இலங்கை அரசாங்கத்தையும் சிங்கள மக்களையும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பதையே அரசாங்கத்தின் இந்த தேசத்தின் மகுடம் கண்காட்சி பறைசாற்றி நிற்கின்றது என்றார்.