யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்ட தனியார் காணிகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டு வருகின்ற அதேவேளை, மாவட்டத்திலுள்ள அரச காணிகள் தொடர்பான தகவல்களும் யாழ். மாவட்ட செயலகத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன.
‘அரச காணிகளை கையளிக்குமாறு படையினரால் அச்சுறுத்தல் விடுப்பப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்ற போதிலும் அச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை’ என்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி என்.விமலராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை கையளிக்குமாறு பிரதேச செயலாளர்களை படையினர் நிர்ப்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகின.
அத்தகவல் தொடர்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அதிகாரி பதிலளிக்கையில், ‘இராணுவத்தினர் அரச திணைக்கள காணிகளை வழங்குமாறு நிர்ப்பந்திப்பதாக அரச அதிகாரிகளினாலோ அல்லது பொது மக்களினாலோ முறைப்பாடுகள் செய்யப்படவில்லை’ என்றார்.
‘இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு காணிகள் வேண்டும் என இராணுவத்தினரால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்த கோரிக்கைகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிமல் வீ புஞ்சிஹேவாவினால் அனுமதிக்கப்பட்டால் காணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பினும் இதுவரையில் அவ்வாறு காணிகள் வழங்கப்படவில்லை’ என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, ‘அரச காணிகளை வழங்குமாறு படையினரால் அரச அதிகாரிகள் எவரும் நிர்பந்திக்கப்படவில்லை என்றும் இது தொடர்பில் பிரதேச செயலாளர்களினால் எந்தவிதமான முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை’ என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறினார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த, யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், ‘அரச காணிகளை கையளிக்குமாறு இராணுவத்தினரால் தாங்கள் நிர்ப்பந்திக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல்கள் விடுக்கப்படவில்லை’ என்றும் அவர்கள் கூறினர்.
‘உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகள் சம்பந்தமாக அரசாங்கத்தினால் மக்களிடையே விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றதாகவும் அரச காணிகள் தொடர்பான தகவல்கள் யாழ். மாவட்ட செயலகத்தினால் திரட்டப்பட்டு வருகின்றதாகவும்’ அவர்கள் மேலும் கூறினர்.