நான் நிதிக்குழுவில் இருந்து ஒருபோதும் இராஜினாமா செய்யமாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமாகிய முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் யாழ். மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற நிதி குழு கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை இந்நிலையில் அந்தக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச்சேர்ந்த முடியப்பு ரெமீடியஸ் மட்டுமே கலந்துக்கொண்டார்.அவர் நிதிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் நிதிக்குழு தலைவராக ஒருவரை நியமித்தது சட்டத்திற்கு முரணானது என கூட்டமைப்பு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பில் வடமாகாண ஆளுநரினால் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிவுறுத்தலின் பிரகாரம் யாழ். மாநகர சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பதவிகளை கையளித்தனர்.
இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நிதிக்குழு தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் தான் வகிக்கும் பதவியில் இருந்து விலகி அந்த பதவியை வேறு நபருக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் நான் பதவியை இராஜினா செய்ய மாட்டேன் எத்தனை பதவிகளிலும் நான் இருப்பேன் என்றார்.
இதன் போது, ஆளுங்கட்சி உறுப்பினர் விஜயகாந் பெரும் தன்மையின் அடிப்படையில் நிதிக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்குகின்றோம் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மரியகொறற்ரி மற்றும் ஜேக்கப் ஆகியோருக்கு நிதிக்குழுவில் பதவிகள் வழங்கப்பட்டன.