மாதகல் கிழக்கு மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாதகல் கிழக்கு J/152 கிராம மக்கள் வீடுகள், குடிநீர், மற்றும் மலசல கூட வசதிகளின்றி இருப்பதாக அப்பகுதி மக்களினால் விசனம் தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலலைர தொடர்புகொண்டு கேட்டபோது,
‘மாதகல் கிழக்கு பகுதியில் 262 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவு செயதுள்ளபோதும் 100 குடும்பங்களே மீள்குடியேறியுள்ளனர்.
இவ்வாறு மீள்குடியேறியவர்களுக்கு வீட்டுத்திட்டத்திகான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
பதிவுகளை மேற்கொண்டவர்களில் 50 இற்கு மேற்பட்ட பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான வீடு மற்றும் மலசல கூடம் அமைப்பதற்கான உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இக்குடும்பங்களுக்கான வீடுகள் விரைவில் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நிதியினை கட்டம் கட்டமாக வழங்கி வீடு அமைத்துக் கொடுக்கப்படும்.
இவ்வீட்டுத்திட்டம் இந்திய நிதி உதவியுடன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அத்துடன் வைக்றோ நிறுவனத்தினால் 150 கிணறுகள் திருத்தி தருவதாக கூறப்பட்டுள்ள போதிலும் தற்போது, அதில் 25 கிணறுகள் திருத்தப்பட்டு பொதுமக்களின் பாவணைக்கு விடப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்தினால் குடிநீர் குழாய்கள் அமைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன’ என அவர் தெரிவித்தார்.