71 வயது மூதாட்டியை தாக்கி 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நான்கு பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு ஏ. எல். விக்கிரமராச்சி தெரிவித்தார்.
யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் மூதாட்டியும் அவரது கணவரும் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்த வேளை, 4 பேர் வீட்டின் சமையல் அறை முகட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியையும் கணவரையும் தாக்கி விட்டு சுமார் 6 லட்சம் ருபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றதாக முதாட்டி யாழ். பொலிஸ் நிலையத்தில் மறுநாள் முறைப்பாடு செய்திருந்தார்.
இம் முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியா தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் மற்ற இருவரும் அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். அவர்களிடத்தில் மேற்கொண்ட விசாரணையின் போது, இந்த சம்பவத்துடன் வவுனியா தாண்டிக்குளம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், குறித்த நபரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று நபர்களையும் பொலிஸ் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.