‘யாழ். குடாநாட்டு கடலில் மீன் பிடிப்பதற்கான பாஸ் நடைமுறை இன்றுவரை தளர்த்தப்படவில்லை.இந்த பாஸ் நடைமுறையை நீக்குவதாக வடமாகாண கடற்படைத் தளபதி வாக்குறுதியளித்த போதும் அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை’ என்று யாழ். மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7ஆம் திகதி பொன்னாலை பகுதியில் உள்ள மீனவர் சமூகத்திற்கிடையிலான கலந்துரையாடலின் போது வடமாகாண கடற்படைத்தளபதி அல்மிரட் உடவத்த, கடலில் மீன் பிடிப்பதற்கான பாஸ் நடைமுறையினை நீக்குவதாக கூறியிருந்த போதும் உள்ளூர் கடற்படை அதிகாரிகள் பாஸ் நடைமுறையினை மேற்கொண்டு வருவதனால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளளாக்கப்டுபவதாக மேற்படி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாதகல், குருநகர் மற்றும் வேலணை பிரதேசத்தில் உள்ள கடற்படையினர் பாஸ் நடைமுறையினை கடைப்பிடிப்பதாகவும், வடமாகாண கடற்படைத் தளபதியின் வாக்குறுதி இன்றுவரை நடைமறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஸ் நடைமுறையுள்ளதால் கடலிற்கு செல்வதும், தொழில் மேற்கொள்வதில் காலக்கெடு கடைப்பிடிக்கப்படுவதாலும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாக யாழ். குடாநாட்டு மீனவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.