யாழ்.மாவட்டத்தில் குடும்பங்களிலுள்ள வறுமை நிலை காரணமாகவே மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மாவட்டத்தின் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிச் செல்வது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களை இனங்கண்டு வாழ்வெழுச்சி திட்டத்தின் ஊடாக இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி பொருளாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பிள்ளைகளின் கல்விக்கு அவர்கள் சிறிய சேமிப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இவ்வாறு சேமிப்பு மேற்கொள்ளாத பெற்றோர்களின் பொருளாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீளவும் பாடசாலையில் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், இம்மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை யாழ். வணிகர் கழகத்தினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து தொழில் வாய்ப்பின்றியிருக்கும் 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முறைசாராக் கல்வித்திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மனைப்பொருளாதார முகாமைத்துவமும் ஆண்களுக்கு மின்னிணைப்பு பயிற்சியும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.