கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன் மீட்பு

kidnapping1கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனொருவன் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அச்சுவேலியைச் சேர்ந்த முத்துலிங்கம் கோகுலன் (வயது 11) என்ற சிறுவனே சனிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை இச்சிறுவன் பார்வையிட்டுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக யாழ். பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்துள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இச்சிறுவனின் அண்ணா அழைத்து வரச் சொன்னதாகக் கூறி இச்சிறுவனை அழைத்துச்சென்று பூநகரியிலுள்ள கோவிலொன்றில் தங்கவைத்துள்ளனர். இதன் பின்னர் இச்சிறுவனை ஞாயிற்றுக்கிழமை காலை பூநகரியிலுள்ள பாலத்திற்கு அருகில் அவ்விருவரும் விட்டுச் சென்றுள்ளதாக இச்சிறுவன் கூறியதாக பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் இச்சிறுவன் அங்கிருந்து யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts