யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சிறு குற்றங்கள் புரிந்த 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கமைய அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக 41 பேரும், சந்தேகத்தின் பெயரில் 13 பேரும், மது அருந்தி பொது இடங்களில் கலகம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 13 பேரும், பிடியானை பிறப்பிக்கப்பட்ட 21 பேரும், மது போதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கலகம் விளைவித்தோர், பொது இடத்தில் மது அருந்தியோர் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர் ஆகிய குற்றங்களுக்காக தலா 2 பேரும், வீதி விபத்து, களவு பொருட்கள் வைத்திருத்தல், ஆத்துமீறி வீட்டிற்கு நுழைதல் மற்றும் பாதுகாப்பு ஆகிய குற்றங்களிற்காக தலா ஒருவரும், சூழல் மாசடைதலுக்கான ஏதுவான காரணியினை வைத்திருந்த குற்றத்திற்காகவும், ஏனைய குற்றங்களிற்காகவும் தலா 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.