யாழ்ப்பாணம் கைதடிச்சந்திப் பகுதியில் தாதி ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் லாவகமாக அறுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தாதி உத்தியோகத்தரான குறித்த பெண் வைத்தியசாலையில் கடமையாற்றி விட்டு, பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில், அப்பகுதியால் இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாதியரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
எனினும் குறித்த பெண் கூக் குரலிட்டும், அங்கு நின்றவர்களால் திருடர்களைப் பிடிக்கமுடியவில்லை. அத்துடன் அவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் கூட்டமாக சைக்கிள் சவாரி செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை!- யாழ்.பொலிஸ்
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நடவடிக்கையின் ஓர் அங்கமாக கூட்டமாக சைக்கிள் சவாரி செய்துவரும் மாணவர்களை வழிமறித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமையை யாழ். நகரப் பகுதிகளில் காணமுடிகின்றது.
மேலும் இரவு நேரங்களில் சைக்கிள் பயணங்களை மேற்கொள்ளும்போது விளக்குகளைப் பொருத்தாமல் வந்தால் அவர்களை எச்சரித்து உடன் விளக்குகளைப் பொருத்துமாறு அறிவுறுத்தல் வழங்குவதையும் காணமுடிகின்றது.
அத்துடன் பாடசாலைகளுக்கு விஜயம் செய்யும் பொலிஸார் வீதி ஒழுங்கு முறைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.