இறந்து போன ஆசிரியை ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போன பெண் ஆசிரியர் ஒருவருக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் இடமாற்றம் வழங்கியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இடமாற்றம் தொடர்பான பட்டியலில் பல குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக குறித்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வடமாகாண பதிலீட்டாசிரியர் இடமாற்றப் பட்டியலில், சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண் ஆசிரியர் ஒருவரது பெயரும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர வேறொரு ஆசிரியரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனால் ஊதியம் வழங்கும் முறையிலும் இது போன்று குறைபாடுகள் இருப்பதாகவே சந்தேகம் எழுகிறது. இந்தப் பட்டியலின் குறைபாடுகள் பற்றி ஏற்கனவே பலரிடம் எடுத்துக் கூறியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
வட்டுக்கோட்டையில் ஆசிரியர்களின் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்து இடமாற்றங்களையும் இதர செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாக பல இலட்சம் ரூபா செலவழித்து, கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும், ஊழியர்களும் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டும் பலன் ஏதுவுமேயில்லை.
ஒரு மாநில கல்விப் பணிப்பாளர் செய்த வேலையை பல நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து இன்று செய்யமுடியவில்லையென்றால் எங்கு தவறு?
ஆசிரியர் இடமாற்றம் வடமாகாணத்தில் அரச சுற்று நிருபங்களுக்கும், நியதிகளுக்கும் அப்பாற்பட்டு அடாவடித்தனமாக நடைபெறுவதனையே காட்டுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.