கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3563 குடும்பங்களுக்கான வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் தெரிவித்தார்.
கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள உரும்பிராய் கிழக்கு ஜே/ 265 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய வீடு ஒன்று இன்று கையளிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள குடும்பங்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 3563 குடும்பங்களுக்கான வீடுகள் இன்னும் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் இந்த தேவையினை நிறைவேற்றுவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக மற்றும் சமய நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினரும் முன்வந்து செயற்பட்டு தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
யார் செய்தாலும் பறவாயில்லை எமது தேவைப்பாடுகள் நிறைவேற்றப்பட்டால் போதும். எனவே இதற்கு செலவாகும் நிதியினை குறித்த குடும்பங்களினால் சேமிக்கப்படும் எனவே எதிர்காலத்தினை முன்னேற்றப்பாதையில் செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அத்துடன் அரச உதவியுடன் நியாப்திட்டத்திலும் இந்தியன் வீடமைப்புத்திட்டத்தின் ஊடாகவும் தற்போது வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.
இதேவேளை 511ஆவது படைப்பிரிவினால் கோப்பபாய் பிரதேச செயலர் பிரிவில் மேலும் பல வீடுகள் இராணுவத்தினரால் கட்டப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.