பாலசிங்கம் தனுசன் – பிராங் கிளின்டன் 9ஆவது விக்கெட்டிற்காக தமக்கிடையில் பகிர்ந்த 122 ஓட்டங்களும், கூடவே பந்துவீச்சாளர்களின் துல்லிமான பந்துவீச்சின் மூலம் ஆட்டத்தில் பொன் அணிகள் போரில் ஆதிக்கம் செலுத்தியது சென். பற்றிக்ஸ் கல்லூரி. இருந்தபோதிலும் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர்களின் பொறுப்பான இறுதிநேர ஆட்டத்தினால் போட்டி சமநிலையில் முடிந்தது.
பொன் அணிகள் போர் எனப்படும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட 96ஆவது போட்டி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் இனிங்ஸில் 55 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 142 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் புஸ்பராஜா அபிராஜ் 56, மதுசன் 34 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக வோஸிங்டன் லூவிஸ் கிளின்டன், அஜித் டர்வின் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 108 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்திருந்தது. அணித்தலைவர் ரிசாந்த ரியூடர் 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
சனிக்கிழமை இரண்டாம் நாளில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. தொடர்ந்து இலக்குகளை இழந்த போதும் 9ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த பாலசிங்கம் தனுசன் 55, பிராங் கிளின்டன் 66 ஓட்டங்களைப் பெற்று, தமக்கிடையில் 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர்.
இந்த இணைப்பாட்டத்தின் மூலம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 92 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பாக அணித்தலைவர் துரைராஜசிங்கம் நிமலேந்திரா 5 இலக்குகளையும், விஜேந்திரன் சோபிநாத் 3 இலக்குகளையும் கைப்பற்றினர்.
120 ஓட்டங்கள் பின்னலையில் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முன்வரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தில் 70 ஓட்டங்களுக்கு 1 இலக்கு இழந்த நிலையில் இருந்தது.
எனினும் இரண்டாவது இலக்கு இழகப்பட்டதிலிருந்து தொடர்ந்து இலக்குகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, துடுப்பாட்ட வீரர்கள் போட்டியினை சமப்படுத்துவதற்கு சிரமப்பட்டனர். பின்வரிசை வீரர்கள் தடுப்பாட்டம் மேற்கொண்டு போட்டியை சமப்படுத்தினர்.
போட்டி நிறைவடையும்போது யாழ்ப்பாணக் கல்லூரி அணி 6 இலக்குகள் இழப்பிற்கு 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் லோகேஸ்வரன் மாதவரூபன் 31, மிதுசன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக அஜித் டாவின் 3, வோஸிங்டன் லூவிஸ் லிவிங்டன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
பொன் அணிகள் போரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பிராங் கிளின்டனும், போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவ்வணியின் அணித்தலைவர் ரிசாந்த ரியூடரும், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த பந்துவீச்சாளர்களாக யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த முறையே புஸ்பராஜா அபிராஜ், அணித்தலைவர் துரைராஜசிங்கம் நிமலேந்திரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.