உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
‘பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ் இருந்த 11,284 ஏக்கர் காணிகளில் 5,282 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன. ஐந்து கட்டங்களாக இந்த காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, 2000 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளன’ என அவர் கூறினார்.
‘மிகுதியாக இருக்கும் 6000 ஏக்கர் காணியில் 80 சதவீதமான காணிகளுக்குள் அரச காணிகளும், தனியார் காணிகளும் உள்ளடங்குகின்றன. உயர்பாதுகாப்பு வலயமொன்று யாழ். மாவட்டத்தில் இல்லை. அவ்வாறு இல்லாத உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை இராணுவம் சுவீகரிப்பதென்பது பொய்யான கருத்து’ என்றும் அவர் கூறினார்.
‘தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களின் தகவலின் பிரகாரம் மிகுதியாக உள்ள 6000 ஏக்கர் காணியில் மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படவுள்ளார்கள். தனியார் காணிகளில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவடையாதுள்ளதால் மக்களை மீள்குடியமர்த்த முடியாதுள்ளது. கண்ணிவெடி அகற்றிய பின்னர் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றும் அவர் கூறினார்.
அத்துடன், ‘ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு யாழ். மாவட்டத்தில் தற்போது காணி விற்பனை செய்யும் விலையினை நஷ்ட ஈடாக வழங்குதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இராணுவத்தால் சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு பதிலாக வேறு இடங்களில் காணியுடன் வீடுகளும் வழங்கப்படும்’ என்றும் அவர் கூறினார்.
‘தனியார் காணிகளில் இருந்த இராணுவத்தினர் அக்காணிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பலாலி பகுதியில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன’ என்றுத் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மேலும் கூறினார்.