படகுகள் ஆர்ப்பாட்டபேரணி நடத்துவேன்: மீண்டும் அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும் நேரே சந்திக்க வைத்து பேச்சு நடத்துவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த சந்திப்புக்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கச்சதீவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதையும் இழுவைப் படகுகளைக் கொண்டு சட்டவிரோத தொழில் முறைகளைக் கையாள்வதையும் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாக்குநீரிணையில் மீன்பிடிப்பதில் இருநாட்டு மீனவர்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு இருநாட்டு மீனவர் சங்கத் தலைவர்களும் கூடி பேச்சுவார்த்தைகள் நடத்துகின்ற அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கையின் வடகடலில் பிரவேசித்து சட்டவிரோதமாகத் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சந்திப்பு குறித்து நடவடிக்கை எடுக்க தவறியதனால், இந்த கச்சதீவு உற்சவத்தின் போது இரு நாட்டு மீனவர்களை சந்திக்கச் செய்வதற்கான முயற்சிகளை தான் செய்ததாகவும், ஆனால் தமிழ் நாட்டில் இருந்து உரிய மீனவ தலைவர்கள் எவரும் உற்சவத்துக்கு வராத காரணத்தினால் அத்தகைய சந்திப்பை அங்கு நடத்த முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இரு நாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு உரிய நடவடிக்கைகளை இரு நாட்டு அரசாங்கங்களும் எடுக்காத பட்சத்தில் தான் கடலில் படகுகளின் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Posts