இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் இவ்வாறு யாழ். சிவில் சமூகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா “எங்களுக்கும் இதயம் இருக்கிறது. இதற்குமேல் எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.
யாழ். சிவில் சமூகத்துக்கும் இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தாவுக்கும் இடையில் நேற்று மாலை யாழ். நகரிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது யாழ். சிவில் சமூகத்தினரால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
வலி.வடக்கில் மக்கள் இன்னமும் மீள்குடியமர அனுமதிக்காததால் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும்.
வவுனியாவில் பல தமிழ்க் கிராமங்களின் பெயர்களை படிப்படியாக சிங்களப் பெயர்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த இந்தியத் தூதுவர், எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முறை அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் மிகக் காட்டமான பிரேரணையில் இந்தியா எந்த மாற்றங்களும் செய்யாமல் ஆதரிக்க வேண்டும் என்றும் சிவில் சமூகத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் எங்களுக்கும் இதயம் இருக்கிறது. இதற்குமேல் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றார். இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பாகவும் அதற்குரிய பயனாளிகள் தொடர்பாகவும் சிவில் சமூகத்தினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய வீட்டுத்திட்டம் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திசைமாறிச் செல்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் நீங்களும் வீட்டுத்திட்டத்தில் நேரடியாகப் பங்குபற்ற வேண்டும். தனியே அரச அதிகாரிகள் செய்வார்கள் என்றிருக்க முடியாது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச சபைத் தலைவர்கள் அடிமட்ட மக்களிடம் சென்று உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியுங்கள்.
இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவில் குளறுபடிகள் இருக்குமாயின், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கு அறிவியுங்கள். மக்களிடம் சென்று சரியான தகவலைத் திரட்டி உண்மையான பயனாளி தெரிவுசெய்யப்படுவதை, நீங்களும் இதில் பங்கெடுத்து உறுதிப்படுத்துங்கள் என்றார்.