யாழில் ”நுட்பம் 2013 ” தகவல் தொழில்நுட்ப மாநாடு

எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நுட்பம் – இலங்கை தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ”எடிசலாற் இலங்கை” நிறுவனத்தின் அனுசரணையில் ”நுட்பம் மாநாடு -2013 ” என்ற தலைப்பில் தொழில்நுட்ப மாநாடு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. பிரதான அனுசரணையாளர்களாக ”சிறீலங்கா ரெலிகொம்” மற்றும் ”கரிகணன் பிறண்டேர்ஸ்” ஆகிய நிறுவனங்கள் தொழிற்படுகின்றன.

இந்த தொழில்நுட்ப மாநாட்டில் தமிழ் தகவல் தொழில் நுட்ப பயன்பாடுகள் , இணைய மற்றும் தகவல் பாதுகாப்பு சவால்களும் தீர்வுகளும் ,கையடக்க சாதனங்களில் தமிழ் ,தமிழ் இணையத்தள முகவரிகள் இலங்கையின் தகவல்தொழில்நுட்ப முயற்சிகள் திறந்த ஆணை மூல/ திறவூற்று மென்பொருள்கள் அவை சம்பந்தமான செயற்பாடுகள், சமூகவலைத்தள பாதிப்புக்கள் தீர்வுகள் இணையவழிக்கல்வி ,கணினிக்குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் ,மின்வணிகம் போன்ற விடயங்களில் 14 தகவல்தொழில்நுட்ப கருத்துரைகள் இடம்பெற உள்ளது. சிறப்பு அதிதி உரை தவிர்ந்த அனைத்தும் தமிழில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இந்த மாநாட்டில் ”2023 இல் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை- யாழ்ப்பாணத்தின் வகிபாகம்” என்ற தலைப்பில் சிறப்பு அதிதி உரையினை மொரட்டுவ பல்லைக்கழகத்தினை சேர்ந்தவரும் இலங்கை ஆள்களபெயர் பதிவு நிறுவனத்தலைவரும் பல்வேறு அரச தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனங்களின் உறுப்பினரும் இலங்கையின் தகவல்தொழில்நுட்பத்துறையின் முன்னோடியுமான பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் வழங்குகின்றார்.

காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில் 3 அமர்வுகளாக கருத்துரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்படுகின்றது. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட உள்ளதால் நுட்பம் இலங்கை அமையத்தின் இணையத்தளமான www.nudpam.lk என்ற முகவரியில் இதற்காக கொடுக்கப்படடுள்ள விண்ணப்ப படிவம் ஊடாக இலவசமாக பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். இதன் மூலம் இறுதி நேர இட நெருக்கடியை தவிர்த்துக்கொள்ள முடியும்.

நுட்பம் – தழிழ் தகவல் தொழில்நுட்ப அமையம் ,இலங்கை ஆனது தமிழில் தகவல் தொழில்நுட்பம் வளர்த்தல்,தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் வளர்த்தல், தமிழ் தகவல் தொழில்நுட்பவியலாளர்களை ஒன்றிணைத்தல், தமிழ் மொழியின் ஊடாக சகல தமிழ் மக்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ள வழிசமைத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2011 ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தொழில்நுட்ப அமையமாகும்.

பதிவுகளை மேற்கொள்ளவும், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும் அமையத்தின் இணையத்தளமான http://தளம்.நுட்பம்.இலங்கை யினை நாடுமாறு கேட்கப்பட்டுள்ளது

Related Posts