30 வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் காணியற்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தால் அவர்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று மேற்படி ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி என்.விமலராஜ் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு காணிகளற்ற நிலையில் வாழ்பவர்கள் மற்றும் காலாகாலமாக காணிகளின்றி வாழும் குடும்பங்கள் தமது பிரிவு கிராம சேவகரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதமுடன், பிரதேச செயலாளர் ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் காணிகள் வழங்கப்படும் அவர் கூறினார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் காணி சீர்திருத்த ஆணைக்குழவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவினால் பரிசீலிக்கப்பட்டு, காணிகளற்றவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அவர் மேலும் கூறினார்.